Reading Time: < 1 minute

கனடாவில் முதன்முறையாக பல் தொடர்பான சிகிச்சைக்கு பெடரல் அரசாங்கம் சலுகை அளிக்க முன்வந்துள்ளது. முதற்கட்டமாக மிக குறைவான வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் தற்போது அறிமுகம் செய்ய உள்ளனர். மேலும் டிசம்பர் 1ம் திகதி தொடங்கி இதற்கான விண்ணப்பம் உரிய அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

ஆண்டு வருவாய் 90,000 டொலருக்கு குறைவாக உள்ள குடும்பங்களில், 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு பல் சிகிச்சை தொடர்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆண்டுக்கு 70,000 டொலருக்கு குறைவாக வருவாய் ஈட்டும் குடும்பத்தின் தலா ஒரு குழந்தைக்கு 650 டொலர் உதவித்தொகை வழங்கப்படும். ஆண்டுக்கு 70,000 முதல் 79,999 டொலர் வருவாய் ஈட்டும் குடும்பத்து குழந்தைகளுக்கு தலா 390 டொலர் வழங்கப்படும்.

80,000 டொலர் முதல் 89,999 டொலர் வருவாய் ஈட்டும் குடும்பத்து குழந்தைகளுக்கு தலா 260 டொலர் வழங்கப்படும். மேலும், இந்த திட்டமானது அக்டோபர் 1, 2022க்கு முந்தைய பல் தொடர்பான செலவுகளையும் ஈடுசெய்யும் என்றே கூறப்படுகிறது.

இந்த புதிய திட்டத்தால் கனடாவில் 500,000 சிறார்கள் வரையில் பயனடைவார்கள் என்றே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் கருதுகிறது. மட்டுமின்றி, இந்த திட்டத்தில் இணைவதால், சிறார்கள் தொடர்பில் ஏற்கனவே பெற்றுவரும் எந்த சலுகைகளும் ரத்து செய்யப்படாது எனவும் உறுதி அளித்துள்ளனர்.

குறித்த சலுகையை பெற்றுக்கொள்ள பெற்றோர்கள் Canada Revenue Agency மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், தொடர்புடைய குழந்தை பல் சிகிச்சை தொடர்பாக தனியார் சலுகைகளை அனுபவிக்கவில்லை என உறுதி செய்ய வேண்டும்.

மேலும், பல் சிகிச்சைக்காக அதிகமாக செலவு செய்து வருவதையும் உறுதி செய்ய வேண்டும். அத்துடன், அதிக செலவு தொடர்பில் ரசீதுகளும் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த திட்டமானது எதிர்வரும் ஆண்டுகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு என விரிவு படுத்தப்படும்.