Reading Time: < 1 minute

கனடாவில் இந்தியாவைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்து வரும் நிலையில், பிரின்ஸ் எட்வர்ட் ஐலேண்ட் (Prince Edward Island) மாகாணம் திடீரென குடியேற்ற விதிகளை மாற்றியுள்ளது.

இதன் காரணமாக இங்கு படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள், இந்தியாவுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி கூறுகையில், “ஏராளமான இந்திய மாணவர்கள் கனடா சென்று படித்து வருகிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறிப்பிடத்தகுந்த வகையிலானது.

ஆனால், ஏராளமான மாணவர்கள் இந்தியாவிற்கு திரும்பும் சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாக எஙகளுக்கு தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து எங்களுக்கு எந்த தகவலம் வரவில்லை.

இங்கொன்று, அங்கொன்று என இருக்கலாம். கனடாவில் இருக்கும் மாணவர்கள் மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொள்வதாக நாங்கள் பார்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளது. இந்தியாவால் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் குழுவின் செயல்பாடு கனடாவில் அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்து கனடாவை வலியுறுத்தி வருகிறது.

காலிஸ்தான் தலைவர் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய விசாரணை அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையில் நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.