கனடாவில் அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்துள்ளனர்.
நாட்டின் மிகப் பெரிய அரசாங்க தொழிற்சங்கமான மத்திய பொதுத்துறை தொழிற்சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சங்கத்தில் சுமார் 155000 ஊழியர்கள் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பமாகும் என தொழிற்சங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நாட்டின் 250 இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளது. சம்பள உயர்வு, தொழில் ஒப்பந்தம் உள்ளிட்ட சில விடயங்களின் அடிப்படையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
போராட்டத்தில் குதித்துள்ள ஊழியர்களில் கனடிய வருமான முகவர் நிறுவனத்தின் 35000 பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
போராட்டம் முன்னெடுக்கப்படும் காலப் பகுதியிலும் பேச்சுவார்த்தைகளை தொடர உத்தேசித்துள்ளதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.