கனடாவிலிருந்து திருமணக் கனவுடன் இந்தியா சென்ற இளம்பெண்ணைக் காதலன் கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த நீலம் (23) என்ற பெண், கனடாவில் வேலைக்காகச் சென்ற நிலையில் தன்னுடைய காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வீட்டைவிட்டு வெளியில் சென்றவர் திரும்ப வரவில்லை என கூறப்படுகின்றது.
காதல் தொடர்பு
நீலம், சுனில் என்பவரைக் காதலித்துவந்தார்.
நீலம் பல நாள்களாக வீட்டுக்கு வராததால் அவருடைய சகோதரி ரோஷ்னி பல இடங்களில் தேடிப்பார்த்தும் சகோதரி கிடைக்காததால் பொலிஸில் அவர் முறைப்பாடு செய்தார்.
கனடாவில் வேலை செய்துகொண்டிருந்த நீலத்தைக் காதலித்து இந்தியாவுக்கு வரவழைத்துக் கொலைசெய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தங்களது புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.
அதேவேளை நீலம் காணாமல்போன அதே நாளில் அவருடைய காதலன் சுனிலும் காணாமல் போயிருந்தார்.
பொலிஸார் நடவடிக்கை எடுக்காததால் நீலம் குடும்பத்தினர் மாநில உள்துறை அமைச்சர் அனிலைச் சந்தித்து, இது தொடர்பாக முறையிட்டதை அடுத்து உடனே இந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
விசாரணையில் அதிர்ச்சி
அதன் பின்னர் நீலத்தின் காதலன் சுனிலைத் தேடிக் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நீலத்தைக் கடத்திச் சென்று கொலைசெய்ததாகத் அதிர்ச்சித்தகவலை கூறியுள்ளார்.
அதோடு தடயத்தை மறைப்பதற்காக 10 அடி ஆழத்தில் குழி தோண்டி நீலத்தின் உடலைப் புதைத்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து அவர் சொன்ன இடத்தில் குழி தோண்டிப் பார்த்தபோது நீலத்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. எச்சங்களில் டி.என்.ஏ பரிசோதனைக்காக உடல் மாதிரி அனுப்பிவைக்கப்பட்டது. சுனிலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.