Reading Time: < 1 minute

கனடாவின் மனிடோபா மாகாணத்தில் உள்ள ஸ்பிராக் எல்லைக் கடவையினூடாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற சம்பவம் தொடர்பில் இருவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கடந்த மே மாதம் 7 ஆம் திகதி, மினி வேன் ஒன்றின் சாரதி வழங்கிய வாக்குமூலத்தில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாக, கனடா எல்லைச் சேவைகள் முகவரக அதிகாரிகள் குறித்த வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர்.

அதிகாரிகள் வாகனத்தைச் சோதனையிட்ட போது, அதன் பின்பகுதியில் 46 வயதுடைய நபர் ஒருவர் மறைந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, வாகனத்தின் சாரதியும் மறைந்திருந்த நபரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 46 வயதுடைய டெமிடோப் ஒமோஃபுயி டேவிஸ் என்பவர், தன்னை கனடாவிற்குள் அழைத்துச் செல்வதற்காக சாரதிக்கு 1,000 டொலர்களை வழங்கியதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இவர் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியூடாகவும் சட்டவிரோதமாக கனடாவிற்குள் நுழைய முயன்று பிடிபட்டவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ‘அறிக்கை சமர்ப்பிக்கத் தவறியமை’ என்ற குற்றச்சாட்டை டேவிஸ் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் ஏற்கனவே சிறையில் கழித்த காலமே தண்டனையாகக் கருதப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

சட்டவிரோதமாக நுழைவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 50 வயதுடைய அமெரிக்கப் பிரஜையான அன்னான் நைஜல் பெர்குசன் என்ற சாரதிக்கு, கடந்த நவம்பர் 4 ஆம் திகதி ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த காலம் கழிக்கப்பட்டு, இன்னும் சுமார் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.