நான்தான் கனடாவின் ராணி என்று கூறிக்கொள்ளும் சர்ச்சைக் கருத்துக்களை பின்பற்றுபவரான பெண் ஒருவர், திடீரென கிராமம் ஒன்றில் முகாமிட, மக்கள் பதற்றமடைந்தார்கள்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Richmound என்னும் கிராமத்துக்குள் இரண்டு மாதங்களுக்கு முன் திடீரென தனது பின்னடியார்களுடன் பெண் ஒருவர் நுழைந்தார்.
அவரது பெயர் ரொமானா ( Romana Didulo, 48). அவர் தான்தான் கனடாவின் ராணி என கூறிவருகிறார். அது பெரிய பிரச்சினை இல்லை என்றாலும், அவரும் அவரது பின்னடியார்களும் QAnon என்னும் சர்ச்சைக்குரிய கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள்.
பதின்ம வயதில் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த ரொமானா, பல தொழில்களை துவக்கினார். பின்னர், 2020ஆம் ஆண்டு அரசியல் கட்சி ஒன்றைத் துவக்கினார்.
தங்களுக்கென தனி சட்டங்கள் உருவாக்கி, வரி செலுத்தக்கூடாது என்பது போன்ற அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட ரொமானாவின் கூட்டத்தார், உள்ளூர் அதிகாரிகளைக் கொல்வதாக மிரட்டியதுடன், மருத்துவத் துறையின் பணியாற்றுவோர், ஊடகவியலாளர்கள் முதலானோருக்கு எதிராக மிரட்டல்கள் விடுத்ததுண்டு.
இந்நிலையில், ரொமானாவும் அவரது பின்னடியார்களும் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Richmound என்னும் கிராமத்துக்குள் இரண்டு மாதங்களுக்கு முன் திடீரென நுழைய, கிராம மக்கள் பதற்றமடைந்தார்கள்.
மக்கள் அவர்களை வெளியேறச் சொல்லியும், அவர்கள் கேட்கவில்லை. அத்துடன்,அவர்கள் அனைவரும் தங்கியிருந்த ஒரு பள்ளிக் கட்டிடமும் ரொமானாவின் பின்னடியார்களில் ஒருவருக்குச் சொந்தமானது என்பதால், அதிகாரிகளாலும் அவர்களை வெளியேற்றமுடியவில்லை.
இப்படிப்பட்ட ஒரு பதற்றமான சூழல் நிலவிய நிலையில், ஒரு நாள், ரொமானாவின் கூட்டத்தார் தங்கியிருந்த பள்ளியில், எரிவாயுக் கலன் ஒன்றின்மீது ஒரு ஹீற்றர் வைக்கப்பட்டிருப்பதைக் கவனித்த மக்கள், அது, தீவிபத்தை ஏற்படுத்தும் வகையிலான விதி மீறல் என்பதால், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவலளித்தார்கள்.
ஆனால், ரொமானாவின் கூட்டம் அதிகாரிகளை தாங்கள் தங்கியிருந்த இடத்துக்குள் அனுமதிக்கவில்லை. மக்கள் கோபமடைந்திருந்த நிலையில், என்ன நடந்ததோ தெரியாது, திடீரென மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வெளியேறியது ரொமானாவின் கூட்டம்.
இதனால் மக்கள் தற்காலிகமாக நிம்மதியடைந்தாலும், மீண்டும் அந்தக் கூட்டம் வந்து தங்களுக்கு தொல்லை கொடுக்குமோ என பதற்றத்திலேயே இருக்கிறார்கள்.