Reading Time: < 1 minute

பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு புலம்பெயர்தல் அவசியம் என்பது தற்போதைய காலகட்டங்களைப் பொருத்தவரை, பெரும்பாலானோர் அறிந்துகொண்டுள்ள விடயம்.

கனடாவுக்கும் அதே நிலைதான் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

ஆனால், புலம்பெயர்தல் என்றாலே, பலரும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதியைக் குறித்துத்தான் எண்ணுகிறார்கள். ஆனால், தற்காலிக புலம்பெயர்தல் என்றும் ஒரு விடயம் உள்ளது.

அத்துடன், கனடாவின் பொருளாதாரத்துக்கும், இந்த தற்காலிக புலம்பெயர்தல் எவ்வளவு முக்கியம் என்பது பலருக்கும் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோர் என்பவர்கள், வெளிநாட்டுப் பணியாளர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோரைக் கொண்ட புலம்பெயர்ந்தோரின் ஒரு பிரிவினர் ஆவர்.

குறிப்பாக, இந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் கனடாவின் பொருளாதார வளர்ச்சியில் 70 சதவிகிதத்துக்கு காரணமாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

ஆனால், இந்த தற்காலிக புலம்பெயர்ந்தோர், குறைத்தே எடை போடப்படுகிறார்கள்!

இந்நிலையில், தற்காலிக புலம்பெயர்தல் குறைந்தால் கனடாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

கனடாவின் நான்கு முக்கிய மாகாணங்களான ஒன்ராறியோ, பிரிட்டிஷ் கொலம்பியா, கியூபெக் மற்றும் ஆல்பர்ட்டா ஆகிய மாகாணங்களில் எத்தனை தற்காலிக புலம்பெயர்ந்தோர் அனுமதிக்கப்பட்டார்கள் என்பதன் அடிப்படையில், அந்த எண்ணிக்கை,கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்னும் GDPயில் ஏற்படும் தாக்கம் கணக்கிடப்பட்டது

காரணம் என்னவென்றால், 2022ஆம் ஆண்டில், ஒன்ராறியோ, பிரிட்டிஷ் கொலம்பியா, கியூபெக் மற்றும் ஆல்பர்ட்டா ஆகிய நான்கு மாகாணங்கள்தான், மொத்த கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 90 சதவிகிதத்துக்கும் காரணமாக அமைந்துள்ளன.

இந்த நான்கு மாகாணங்களைக் கணக்கிடும்போது, அங்கு தற்காலிக புலம்பெயர்தலில் ஏற்பட்ட மாற்றம், மொத்த உள்நாட்டு உற்பத்தியை பாதித்தது தெரியவந்தது.

அதாவது, இந்த நான்கு மாகாணங்களில் தற்காலிக புலம்பெயர்தல் குறைந்தபோது, அந்த மாகாணங்களில், அதாவது, சொல்லப்போனால், மொத்த கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

ஆக, நாட்டில் எத்தகைய சூழல் நிலவினாலும், இந்த தற்காலிக புலம்பெயர்தல் மீது அரசு கவனம் செலுத்தவேண்டும் என்றும், அப்படி தற்காலிக புலம்பெயர்ந்தோரை முறையாக கவனிக்காவிட்டால், கனடாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.