இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக கனடாவில் நிறைவேற்றப்பட்ட பிரகடனத்தை கண்டிக்கும் வகையில், நாடாளுமன்றில் தீர்மானமொன்றைக் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்புத் தொடர்பான கண்காணிப்பு குழுவின் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் முப்படையின் தலைமை அதிகாரிகள் புலனாய்வு பிரிவுகளின் பிரதான அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர, கனடாவின் தீர்மானத்தினை கண்டிப்பதற்காக வெளிவிவகார அமைச்சு நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கனடாவின் நடவடிக்கைக்கு வெளிவிவகார அமைச்சர் கடும் கண்டனம் வெளியிட்டதை பாராட்டிய அவர், இதுதொடர்பாக தனிநபர் பிரேரணையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஆதாரங்கள் அற்ற யுத்தகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கனடா விதித்துள்ள பயணத்தடைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்தினருக்கு கடும் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சவாலுக்கு உட்படுத்தாமல் தொடர அனுமதித்தால் அது தனிநாடு குறித்த கோரிக்கைகளை நியாயப்படுத்திவிடும் என்றும் அவர் இந்தக் கூட்டத்தின்போது தெரிவித்தார்.
அத்தோடு, இவ்வாறான செயற்பாடுகளினால் இராணுவ அதிகாரிகள் நம்பிக்கை இழப்பார்கள் என்றும் எதிர்கால யுத்தங்களில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது என்றும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
எனவே விரைவில் அமைச்சரவையின் அனுமதியுடன், நாடாளுமன்றில் கனடாவின் பிரகடனத்திற்கு எதிராக தீர்மானமொன்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.