வெளிநாடுகளுடன் தகவல்களைப் பகிரும் போது, அந்த தகவல்கள் சித்திரவதை அல்லது மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்காத வகையில் கனடாவின் சில மத்திய அரச நிறுவனங்கள் மேலும் கவனமாக செயல்பட வேண்டும் என புதிய பாதுகாப்பு கண்காணிப்பு அறிக்கை எச்சரித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை மறுஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், சர்ச்சைக்குரிய தகவல் பரிமாற்றங்களை கையாளும் சட்ட நடைமுறைகளை வலுப்படுத்த பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு அமைப்புகளால் ஏற்படும் தவறான நடத்தைகளில் பங்காளியாக இருப்பதைத் தவிர்க்கும் சட்டம் வெளிநாட்டு அமைப்புகளுடன் தகவல்களை பகிர்வதை அல்லது அவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை பயன்படுத்துவதை தடை செய்கிறது.
குறிப்பாக, அந்த நடவடிக்கை காரணமாக ஒருவர் வெளிநாட்டில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சித்திரவதை அல்லது மனிதாபிமானமற்ற நடத்தைக்கு உள்ளாகும் கணிசமான அபாயம் இருந்தால் அது அனுமதிக்கப்படாது.
எனினும், அந்த அபாயங்களை மதிப்பீடு செய்து, அவற்றை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே தகவல் பகிர்வு அனுமதிக்கப்படலாம். இது அபாயத்தை குறைக்கும் நடைமுறை என அழைக்கப்படுகிறது.
மேலும், சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனைகளை ஒழிப்பதற்கான சர்வதேச மனித உரிமை கடமைகளுக்கு ஏற்ப இந்த கடுமையான விதிமுறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு தகவல் பகிர்வு தொடர்பான முடிவுகளில் இந்த சட்டத் தேவைகளை எவ்வாறு பரிசீலித்தனர் என்பதற்கான முழுமையான பதிவுகளை மத்திய அரச நிறுவனங்கள் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.