Reading Time: < 1 minute

கணினிச் செயலிழப்பு காரணமாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) சோதனை முடிவுகள் தாமதமாகியுள்ளதாக ஒன்றாரியோ பொது சுகாதார சபை தெரிவித்துள்ளது.

நேற்று (புதன்கிழமை )இரவு தங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஏற்பட்டுள்ள இன்னலுக்கு சுகாதார நிறுவனம் மன்னிப்பு கோரியது.

எதிர்பாராத செயலிழப்பு காரணமாக, பொது சுகாதார ஒன்றாரியோவின் ஆய்வகத்தால் தற்போது நோயாளியின் சோதனை முடிவுகளை அணுகவோ அல்லது வெளியிடவோ முடியவில்லை. சில ஆய்வகச் சோதனை அறிக்கைகள் இதன் விளைவாக தாமதமாகலாம், என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிந்தவரை விரைவாக இயல்பான செயற்பாடுகளுக்கு திரும்புவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றும் தெரிவித்தது.

இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘ஆய்வகத் தகவல் மற்றும் மாகாணத்தின் கொவிட்-19 கண்டறியும் சோதனை வலையமைப்பு செயலிழப்பால் பாதிக்கப்படவில்லை. கொவிட்-19 மாதிரிகளையும் பொதுச் சுகாதாரம் ஒன்றாரியோ தொடர்ந்து சோதித்து வருகிறது.

நோயாளிகளின் மேலாண்மை மற்றும் சரியான நேரத்தில் பொது சுகாதார நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக அனைத்து கொவிட்-19 நேர்மறை சோதனை முடிவுகளுடன் சுகாதார வழங்குநர்கள் மற்றும் உள்ளூர் பொது சுகாதார பிரிவுகளை நாங்கள் அழைக்கிறோம்’ என கூறினார்.

வழக்கமான நடவடிக்கைகள் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.