கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு கனேடியர்களை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.
வெளிநாடுகள் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கோரும் மத்திய அரசின் பொது சுகாதார வழிகாட்டுதலை நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ட்ரூடோ மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தினார்.
வேகமாகப் பரவக்கூடிய கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகள் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்கும் நடவடிக்கையையில் கனேடிய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையிலேயே வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பயணங்களையும் இரத்துச் செய்யுமாறும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஒருசிலரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் காரணமாக ஏனைய அனைவரும் ஆபத்தில் சிக்கிக்கொள்வதை அனுமதிக்க முடியாது எனவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார்.