கனடாவில் பணவீக்கம் கடந்த 18 வருடங்களில் இல்லாதவாறு உச்சம் பெற்றுள்ளது. பொருட்களின் விலைகள் செப்டம்பர் மாதத்தில் மிக வேகமாக அதிகரித்துள்ளதால் வாழ்க்கைச் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது.
சர்வதேச விநியோகச் சங்கிலி சிக்கல்களுடன் கனடா தொடர்ந்து போராடி வரும் நிலையில் பணவீக்கம் மோசமாக உயர்ந்துள்ளது.
நாட்டில் ஆண்டு பணவீக்க விகிதம் 4.4% ஆக உயர்ந்தது. ஆகஸ்ட் மாதத்தில் இது 4.1% ஆக இருந்தது. 2003 பெப்ரவரிக்குக் பின்னர் உயர்ந்தபட்ச பணவீக்க வீதமாக இது பதிவாகியுள்ளதாக கனடா புள்ளிவிபரவியல் துறை தெரிவித்துள்ளது.
கனடாவில் போக்குவரத்து, வீட்டுவசதி செலவீனங்களும் கணிசமாக உயர்ந்துள்ளதுடன், உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரவியல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வட்டி விகிதத்தை உயர்த்துவதா? என்பது குறித்து அடுத்த வாரம் கூடி ஆராய்வது குறித்து கனடாவின் மத்திய வங்கி பரிசீலித்து வருகிறது.
அதிகரித்து வரும் நுகர்வோர் தேவை, சர்வதேச விநியோகச் சங்கிலி சீர்குலைவு, உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி, சா்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு என்பவை வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.
பணவீக்கத்துக்கு முக்கிய காரணியாக பெட்ரோல் விலை உயர்வு அமைந்துள்ளது. 2020 – செப்டம்பர் மாதத்துடன், ஒப்பிடுகையில் பெட்ரோல் விலை 32.8% அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரவியல் துறை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையும் 3.9% உயர்ந்துள்ளது. இறைச்சி வகைகளின் விலை 9.5% அதிகரித்துள்ளது. அத்துடன், வீட்டுச் செலவு 4.8% உயர்ந்தது.
விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக பணவீக்க வீதம் குறைய எதிர்பார்த்ததை விட அதிக காலம் எடுக்கும் என கனடா வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் உலகில் பெரும்பாலான நாடுகள் பணவீக்கம் தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. இதிலிருந்து மீண்டு வர சிறிது காலம் எடுக்கலாம் எனவும் அவா் கூறினார்.
நுகர்வோர் மற்றும் வணிக அமைப்புக்களுக்கான கடன் செலவைக் குறைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் நோக்கில் அடிப்படை வட்டி விகிதத்தை கனடா வங்கி கடந்த ஆண்டு 0.25% குறைத்தது குறிப்பிடத்தக்கது.