ஒன்ராறியோ மாகாணம் – பெர்ரி (Barrie) நகரில் வீசிய திடீர் சூறாவளி (Tornado) காரணமாக 9 பேர் காயதடைந்தனர். அவர்களில் நான்கு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். 25-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
நேற்று வியாழக்கிழமை பிற்பகல் வீசிய சூறாவளி விளைவுகளால் 9 பேர் காயமடைந்துள்ளதை செய்தியாளர்களிடம் உறுதி செய்த பெர்ரி மேயர் ஜெஃப் லெஹ்மன், இதுவரை எந்தவிதமான உயிரிழப்புகளும் பதிவாகவில்லை என்று கூறினார்.
இதேவேளை, சூறாவளியால் சுமார் 25 க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் இடிபாடுகளுக்குக்குள் யாரேனும் சிக்கியுள்ளார்களா? என அறிந்துகொள்ள தேடுதல்கள் இடம்பெற்று வருவதாக நகர தீயணைப்பு மற்றும் அவசர கால மீட்புக் குழுவினர் அறிவித்துள்ளர்.
நேற்று பிற்பகல் திடீரென பெரும் காற்று சூழன்றடிக்கத் தொடங்கியது. இதனையடுத்து நாங்கள் தரைத் தளங்களுக்கு இறங்கிவிட்டோம். சுழல் காற்று 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீடித்தது என பெர்ரி நகர குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு சூறாவளிதான் என கனடா சுற்றுச்சூழல் வானிலை ஆய்வாளர் ஸ்டீவன் பிளிஸ்ஃபெடர் உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, சூறாவளி காரணமாக பெர்ரி நகரில் ஆயிரக்கணக்கான வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனினும் அவற்றை சீர் செய்யும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திடீர் சூறாவளியின் பின்னர் நகரில் பல இடங்கள் போர் மண்டலம் போன்று காட்சியளிக்கின்றன என பெர்ரி நகர பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பீட்டர் லியோன் கூறினார்.
1985-ஆம் ஆண்டு பெர்ரி நகரை இவ்வாறான ஒரு பாரிய சூறாவளி தாக்கியது. அதன் பின்னர் ஒரு பாரிய அழிவுகரமான சூறாவளியை இப்போதுதான் பார்த்தோம் என பெர்ரி நகர குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூறாவளியால் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ரோயல் விக்டோரியா பிராந்திய சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் வழங்குவதற்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என பெர்ரி மருத்துவமனையின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜானிஸ் ஸ்காட் கூறினார்.
இந்நிலையில் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் ஆறுதல் தெரிவித்துள்ளார். உடனடி மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அவா் நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையே பெர்ரி நகரில் ஏற்பட்ட சூறாவளியின் பாதிப்புக்கள் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பவுள்ளதாக கனடா சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.
பெர்ரி நகரில் உள்ள எவரும் அவசர உதவிகளுக்கு 705-728-8442 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பெர்ரி நகர பொலிஸார் அறிவித்துள்ளனர்.