Reading Time: < 1 minute

ஒன்ராறியோவில் குறைந்தபட்ச ஊதியம் பெறும் சில தரப்பு தொழிலாளர்கள் இந்த வாரம் ஊதிய உயர்வை காண்பார்கள் என தெரியவந்துள்ளது.

ஒன்ராறியோ நிர்வாகமானது குறைந்தபட்ச ஊதியம் பெறும் சில தரப்பு தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ளது. இதுவரை 14.35 டொலர் ஊதிய பெற்றுவந்தவர்கள் இனி மணிக்கு 15 டொலர்கள் ஊதியமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 12.55 டொலர் ஊதியமாக பெற்றுவந்த மதுபான விடுதிகளில் பணியாற்றிவோர் இனி 15 டொலர் ஊதியமாக பெறுவார்கள். வாரத்திற்கு 28 மணி நேரம் பணியாற்றும் 18 வயதுக்கும் கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் இனி மணிக்கு 14.10 டொலர் ஊதியமாக பெற உள்ளனர்.

ஒன்ராறியோவில் 2021 ஜனவரி மாதம் முதல் நவம்பர் வரையான காலகட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் பெறும் தொழிலாளர்கள் என 767,000 பேர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

பல தொழில்களில் தொழிலாளர் தட்டுப்பாடு, தொழில்கள் மற்றும் வணிகங்கள் பணவீக்கத்துடன் போராடி வரும் நிலையில், உரிய தொழிலாளர்களை ஈர்ப்பதற்காகவே இதுபோன்ற ஊதிய உயர்வை மாகாண நிர்வாகம் அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.