ஒக்ஸ்போர்ட்- எல்ஜினில் ஓபியாய்ட் தொடர்பாக அவசரகாலதுறைக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்தும் அதிகரித்துவருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டின் ஜனவரி 19ஆம் திகதி முதல் பெப்ரவரி 1ஆம் திகதி வரையிலான இரண்டு வார காலப்பகுதியில் வூட்ஸ்டாக், டில்சன்பர்க், இங்கர்சால் மற்றும் செயின்ட் தாமஸ் ஆகிய இடங்களில் மருத்துவமனை அவசர துறைக்கு 19பேர் வருகை தந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுகாதார அதிகாரிகளின் அறிக்கையின் படி, வாரத்திற்கு சராசரியாக ஐந்து பேர் வருகை தருவதாகவும், சமீபத்திய சில வருகைகள் அபாயகரமானதாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
தென்மேற்கு பொது சுகாதாரத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் படி, ஒக்ஸ்போர்ட் மற்றும் எல்ஜின் மாவட்டங்களில் 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 11 பேர் ஓபியாய்ட் அளவுக்கதிகமாக எடுத்துக் கொண்டதால் இறந்துள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டில் சட்பரி மற்றும் மனிடூலினில் ஓபியாய்ட் தொடர்பாக, 32பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பிராண்ட்ஃபோர்ட்டில், 2020ஆம் ஆண்டின் முதல் 12 நாட்களில் 17 அளவுக்கு அதிகமான ஒபியாய்ட்டை எடுத்துக் கொண்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அண்மையில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தமை நினைவுக்கூரத்தக்கது.