Reading Time: < 1 minute

தங்கள் நாட்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் மைக்கேல் ஸ்பாவோருக்கு சீன நீதிமன்றம், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இரண்டரை வருடங்களுக்கும் மேல் சீனாவில் சிறை வைக்கப்பட்டிருந்த மைக்கேல் ஸ்பாவோர், மீதான வழக்கு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஏற்கெனவே, போதை மருந்து வழக்கில் கனடா நாட்டைச் சேர்ந்த ரொபர்ட் லாய்டுக்கு, சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்த ஒருநாளுக்கு பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு சீனாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி மெங் வான்சூவை கனேடிய பொலிஸார் கைதுசெய்தனர்.

மேற்காசிய நாடான ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீறியதாகக் கூறி, அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கனேடிய அரசாங்கம் பின்னர் விளக்கம் அளித்தது.

இதனால், ஆத்திரமடைந்த சீனா, இதற்குப் பழி வாங்கும் வகையில் கனடா நாட்டவர்களை சீனா பல்வேறு வழக்குகளில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கனடாவை சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி மைக்கேல் கோவ்ரிக் மற்றும் வர்த்தகர் மைக்கேல் ஸ்பாவோர் ஆகியோர் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் சீனாவில் கைதுசெய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, ஐரோப்பிய நாடுகள் உட்பட 26க்கும் அதிகமான நாடுகள் இவர்களின் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இதனையும் மீறி சீனா தற்போது சிறை தண்டனை விதித்துள்ளது.