பரிசுப் பொருள் விழுந்திருப்பதாக கூறி பெண்ணிடம் இருந்து லட்ச கணக்கில் பணத்தை சுருட்டிய கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
மோசடி
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மனித குலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை அளித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இணையத்தின் வீச்சும், சமூக வலை தளங்களின் வருகையும் பல கொடைகளை மானுட குலத்திற்கு அளித்திருக்கிறது. இதன் மூலம், நம்முடைய தகவலை நொடிப்பொழுதில் உலகெங்கும் கொண்டுபோய் சேர்க்க முடிகிறது. ஆனாலும், இதனை பயன்படுத்தி தீய காரியங்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். பிறரது தகவல்களை திருடுவது, அக்கவுண்ட்டை ஹேக் செய்து பணம் பறிப்பது என புதுப்புது வழிகளில் மக்களை ஏமாற்றி வருகின்றனர் இந்த மோசடி கும்பல்கள்.
பரிசு
அந்த வகையில் வித்தியாசமான முறையில் அரியலூரை சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து பணத்தை சுருட்டியிருக்கிறது மர்ம கும்பல் ஒன்று. அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி ஜெயந்தி. இந்த தம்பதிக்கு விமல் ராஜ் என்ற மகன் உள்ளார். சமீபத்தில் ஜெயந்தியின் வாட்சப்பிற்கு ஒரு போன்கால் வந்திருக்கிறது. அதில், பெண் ஒருவர் ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார். அப்போது தனது மகளது பிறந்தநாளை முன்னிட்டு பரிசு பொருள் மற்றும் பணத்தை அனுப்ப விருப்பப்படுவதாக தெரிவித்திருக்கிறார் அந்த பெண்.
இதற்கு ஜெயந்தி ஒப்புக்கொள்ளவே, வரியாக 35,000 ரூபாயை செலுத்தவேண்டும் என பெண்மணி கூறியிருக்கிறார். இதனை நம்பிய ஜெயந்தியும் 35 ஆயிரம் ரூபாயை அவர்கள் கொடுத்த அக்கவுண்டிற்கு அனுப்பியுள்ளார். ஆனால், இது அத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து ஆயிர கணக்கில் பணத்தை பெற்றிருக்கிறது அந்த கும்பல். இப்படி 12 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை ஜெயந்தியிடம் இருந்து அந்த கும்பல் பெற்றிருக்கிறது.
கடன்
செல்வராஜ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருடைய சிகிச்சைக்கு கிடைக்கும் பணத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கில் மோசடி கும்பலுக்கு பணத்தை அளித்திருக்கிறார் ஜெயந்தி. இதற்காக, அக்கம் பக்கத்தில் லட்சக்கணக்கில் பணத்தை கடனாக பெற்றிருக்கிறார். இதனிடையே மேலும், பணம் கேட்டு அந்த கும்பல் வற்புறுத்தியிருக்கிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துகொண்ட ஜெயந்தி இதுகுறித்து அரியலூர் மாவட்ட சைபர் பிரிவில் புகார் அளித்திருக்கிறார்.