Reading Time: < 1 minute

கனடாவில் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தின்மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர் மீதான வழக்கில், அவர் போதையில் இருந்ததால் தவறு நிகழ்ந்துவிட்டதாக வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், 2021ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, சல்மான் அஃப்சால் (46), அவரது மனைவி மதீஹா சல்மான் (44), தம்பதியரின் மகள் யும்னா அஃப்சால் (15), தம்பதியரின் 9 வயது மகன் மற்றும் அஃப்சாலின் தாயாகிய தலத் அஃப்சால் (74) ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, நத்தானியேல் (Nathaniel Veltman, 20) என்ற நபர் வேண்டுமென்றே தனது வேனைக்கொண்டு அவர்கள் மீது மோதினார்.

வேன் மோதியதில், சல்மான், அவரது மனைவி மதீஹா, தம்பதியரின் மகள் யும்னா மற்றும் அஃப்சாலின் தாயாகிய தலத் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

தம்பதியரின் மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், பின் உயிர் பிழைத்துக்கொண்டான். இந்தக் குடும்பம் பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த குடும்பம் ஆகும்.

சம்பந்தப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அவர்கள் மீதான வெறுப்பு காரணமாக நத்தானியேல் வேனை வேண்டுமென்றே அவர்கள் மீது மோதியதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தார்கள்.

இந்த கோரத் தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட தான் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்த கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்று தெரிவித்திருந்தார்.

நத்தானியேல் மீது நான்கு கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டு ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் கனடா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்த, நாடு முழுவதும் மக்கள் பேரணிகளில் இறங்கினார்கள்.

இந்நிலையில், தான் குற்றம் செய்யவில்லை என நத்தானியேல் கூறிவருகிறார். அதற்கு ஆதரவாக, அவரது தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், அவருக்கு ஏற்கனவே பல மன நலப் பிரச்சினைகள் இருப்பதாகவும், சம்பவம் நடப்பதற்கு 40 மணி நேரம் முன்பு அவர் போதைப்பொருள் எடுத்திருந்ததாகவும், அதுவே இந்த அசம்பாவிதம் நிகழ காரணமாக அமைந்துவிட்டதாகவும் நடுவர் மன்றம் முன் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், சம்பவம் நடந்த அன்று, நத்தானியேல் குண்டு துளைக்காத உடையும், ராணுவ ஹெல்மெட்டும் அணிந்து அந்த வேனை இயக்கியதைக் காட்டும் வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளன.

அத்துடன், சம்பவம் நடந்தபின், தான் ஒரு வெள்ளையின தேசியவாதி என்றும், இஸ்லாமியர்கள் என்பதாலேயே, தான் அவர்கள் மீது வேனை மோதியதாகவும் பொலிசாரிடமே கூறியிருந்தார் நத்தானியேல். அத்துடன், வேனை மோதிவிட்டு, அவசர உதவியை அழைத்து, நான் வேண்டுமென்றேதான் செய்தேன், வந்து என்னைக் கைது செய்யுங்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

விடயம் என்னவென்றால், இந்த வழக்கு ஒரு சாதாரண விபத்து வழக்கு அல்ல. இது, கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு மட்டுமின்றி, நத்தானியேலின் செயல்கள் தீவிரவாதமாக கருதப்படுமா என்பதும் நடுவர் மன்றம் முடிவு செய்ய உள்ளது.

கனடாவில், இத்தகைய ஒரு வழக்கு நடுவர் மன்றம் முன் வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.