Reading Time: < 1 minute

இஸ்ரேல், காசாவுக்கிடையில் மோதல் தொடரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் காசாவில் வாழும் கனேடியர்களுக்கு கனடா எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துக்கொண்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியத்துக்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்றுவரும் நிலையில், பாலஸ்தீன ஆயுதக்குழுவான ஹமாஸ் என்னும் அமைப்பு, கடந்த சனிக்கிழமை காலை, காசா பகுதியிலிருந்து திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

அதில் 700க்கும் மேற்பட்டவர்கள், பொதுமக்களும் ராணுவ வீரர்களும் உயிரிழந்தார்கள். இஸ்ரேல் திருப்பித் தாக்க, காசா தரப்பில் 413 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த மோதல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதோடு, இஸ்ரேல் நாட்டிலிருந்து பொதுமக்களையும் கடத்திச் சென்று பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் காசாவில் வாழும் கனேடியர்களுக்கு கனடா அரசு செய்தி ஒன்றைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.

காசாவுக்குப் பயணிப்பதைத் தவிர்க்குமாறு கனடா அரசு கனேடியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளதுடன், இஸ்ரேலிலும், பாலஸ்தீனத்திலும் வாழும் கனேடியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேலில் 1,419 கனேடியர்களும், பாலஸ்தீனத்தில் 492 கனேடியர்களும் வாழ்ந்துவருகிறார்கள். இதற்கிடையில், தாக்குதலில் ஒரு கனேடியர் கொல்லப்பட்டதாகவும், இருவரைக் காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் கனேடிய ஏஜன்சி ஒன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.