கோவிட் 19 தொற்று நோய் நெருக்கடி இருந்தபோதும் இவ்வாண்டு 401,000 புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் வரவேற்கும் இலக்கை அடைவதில் கனடா தொடர்ந்தும் உறுதியுடன் உள்ளது.
இந்த வருடத்தில் முதல் காலாண்டில் கனடா 70,000 க்கும் மேற்பட்ட புதிய குடியேற்றவாசிகளை வரவேற்றுள்ளதாக கனேடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை தரவுகள் கூறுகின்றன.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 22,425 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா உள்ளீர்த்துள்ளது.
2020 ஒக்டோபர் மாதம் கனடாவின் இலட்சிய குடியேற்றத் திட்டத்தை கனேடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் மார்கோ மென்டிசினோ வெளியிட்டார். 2021 முதல் 2023 ஆம் ஆண்டுக்குள் 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை வரவேற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தார்.
இதன் ஒரு கட்டமாக 2021 ஆம் ஆண்டில் 401,000 புதிய புலம்பெயர் குடியிருப்பாளர்களை கனடா வரவேற்கும் எனவும் மார்கோ மென்டிசினோ குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு தொற்று நோய் நெருக்கடி காரணமாக கனடா 184,000 புலம்பெயர்ந்தோரையே வரவேற்றது. 2019 ஆம் ஆண்டு கனடா வரவேற்ற 341,000 குடியேற்றவாசிகளுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.
தொற்றுநோய்க்கு பிந்தைய கனடாவின் பொருளாதார மீட்சியை உறுதி செய்வதே கனடாவின் புதிய குடியேற்றக் கொள்கையாக அமைந்துள்ளது.
இதன் ஒருபடியாக தொற்றுநோய் நெருக்கடியின்போது கனடாவில் உள்ள தற்காலிக குடியிருப்பாளர்களை நிரந்தர குடியிருப்பாளர்களாக அங்கீகரிக்கும் வேலைத்திட்டங்களுக்கும் கனடா முன்னுரிமை அளித்துவருகிறமையும் குறிப்பிடத்தக்கது.