Reading Time: < 1 minute

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்பட இருக்கும் வரியால், அந்தப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பதை அமெரிக்கர்கள் உணரத் துவங்கியுள்ளார்கள் என்று கூறியுள்ளார் ட்ரூடோ.

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதிக்குமானால், அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், கையெழுத்திடும் முதல் ஆவணங்களில் ஒன்று, கனடா, மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிப்பது தொடர்பானதுதான் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படுமானால், அது கனடாவின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்பதை மறுக்கமுடியாது என்று கூறியுள்ளார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.

அதே நேரத்தில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ட்ரம்ப் வரி விதிப்பாரானால், அந்தப் பொருட்களின் விலை கணிசமாக அதிகரிக்கும் என்னும் உண்மையை அமெரிக்கர்கள் உணரத்துவங்கியுள்ளதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஸ்டீல் மற்றும் அலுமினியத்துக்காக கனடாவைத்தான் சார்ந்துள்ளது.

அத்துடன், அமெரிக்கா தனது கச்சா எண்ணெய் தேவையில் 65 சதவிகிதத்தையும், குறிப்பிடத்தக்க அளவிலான மின்சாரத்தையும், கனடாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறது.

கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மொத்த இயற்கை எரிவாயுவும் அமெரிக்காவுக்குத்தான் செல்கிறது.

வேளாண்மைக்கான பொருட்களையும் கனடா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது.

ஆக, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இத்தனை பொருட்கள் மீதும் அமெரிக்கா 25 சதவிகித வரி விதிக்குமானால், அமெரிக்காவில், அவை அனைத்தின் விலையும் கணிசமாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.