Reading Time: < 1 minute

நியூஃபவுண்ட்லான்ட்டில் சலமன் மீன் வளர்ப்புப் பண்ணை ஒன்றில், கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் சுமார் 2.6 மில்லியன் மீன்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

கடலிலேயே பண்ணை அமைத்து மீன் வளர்க்கும் அந்த நோர்வே நிறுவனத்தினால் வளர்க்கப்பட்டுவரும் சலமன் மீன்களில் இது அரைப் பங்கு என்று கூறப்படுகிறது.

குறித்த அந்த நிறுவனத்திற்காக வழங்கப்பட்டுள்ள பகுதியில், இவ்வாறு மீன்கள் பலியான பகுதிக்கான அனுமதியினை மாநில அரசாங்கம் தடை செய்துள்ள நிலையில், நேற்று குறித்த அந்த நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள மாநில மீன்வளத்துறை மற்றும் நில வளங்கள் துறை அமைச்சர், இவ்வாறு பெருமளவு மீன்கள் பலியான தகவலை நேற்று வெள்ளிக்கிழமை அறிந்து கொண்டதாகவும், குறித்த அந்த நிறுவனம் ஆரம்பத்தில் இறந்ததாக தெரிவித்த மீன்களின் எண்ணிக்கையை விடவும் உண்மையான தொகை அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமக்கான அந்த அனுமதி இடை நிறுத்தப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ள அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், தமது 13 பண்ணைப் பகுதிகளில் 10 பகுதிகளுக்கான அனுமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது மீன்கள் இறந்த பகுதியை துப்பரவு செய்வதில் அவதானம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.

நீண்ட நாட்களாக அந்தப் பகுதியில் நீரின் வெப்பம் அதிகமாக காணப்பட்டதனால் முதலில் இரண்டு மில்லியன் மீன்கள் இறந்ததாகவும், அது குறித்து செப்டம்பர் 3ஆம் திகதி அரசாங்கத்திற்கு அறிவித்ததாகவும், இந்த வெப்ப அதிகரிப்பினால் பலவீனமடைந்து காணப்பட்ட சுமார் ஆறு இலட்சம் மீன்கள் பின்னர் இறந்ததாகவும் அவர் விபரித்துள்ளார்.