கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் நடந்த இனவெறி எதிர்ப்பு பேரணியில் கலந்துக் கொண்டார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த பேரணியில், எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென இணைந்துக்கொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு 9 நிமிடங்கள் மண்டியிட்டு மௌன அஞ்சலி செலுத்தினார்.
மேலும், ட்ரூடோவுடன்; சோமாலிய வம்சாவளி சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் அகமது ஹூசென் அவரது குடும்ப உறுப்பினர்களும் இணைந்துக்கொண்டனர்.
கறுப்பு முகக்கவசம் அணிந்து, மெய்க்காப்பாளர்களால் சூழப்பட்ட ட்ரூடோ மண்டியிட்டதற்காக, பலர் ட்ரூடோவுக்கு நன்றி தெரிவித்தனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போராட்டக்காரர்கள் ஒன்று கூடவேண்டாம் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் எச்சரித்திருந்த நிலையில், பேரணியில் பிரதமர் ட்ரூடோ பங்கேற்றார்.
நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி ரொறன்ரோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இதுபோன்ற பேரணி நடைபெற்றது.