Reading Time: < 1 minute

கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றிய இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், அவர் பணியாற்றிய பாதுகாப்பு நிறுவனம் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tamil Business Directory

எட்மண்டன் நகரில் நோர்குவெஸ்ட் கல்லூரியில் கல்வி கற்றுவந்த ஹர்ஷன்தீப் சிங் (Harshandeep Singh) என்ற 20 வயதுடைய இந்திய மாணவர், 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் திகதி அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் பணியில் இணைந்து மூன்றாவது நாளிலேயே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த மாணவரின் பணியிடப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியதாக National Security Guard Protection Services Inc. நிறுவனம் மீது அல்பேர்ட்டா மாகாணத்தின் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புச் சட்ட விதிகளின் கீழ் ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாணவர் கொல்லப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரும் அதே குடியிருப்புக் கட்டிடத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

பணியிட அபாயங்களை முறையாக மறுமதிப்பீடு செய்யாமை, பாதுகாப்பற்ற சூழலில் பணியாளர்களைத் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தியமை மற்றும் வன்முறைத் தடுப்புத் திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிறுவனம் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, மாணவரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இவான் ரெயின் மற்றும் ஜூடித் சால்டோ ஆகிய இருவர் மீதும் முதலாம் நிலைக் கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

பாதுகாப்பு நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Comments are closed, but trackbacks and pingbacks are open.