Reading Time: < 1 minute

இந்தியாவில் உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்திய மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாடிக்கையாளர் ஒருவருக்கு இத்தனை கிலோ அரிசிதான் விற்கப்படும் என்ற கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது.

உலகில் அரிசி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த தடை சர்வதேச அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய , ஆபிரிக்க கோடிக்கணக்கான மக்களின் பிரதான உணவுப்பொருளாக அரிசி உள்ளது.

அரிசிவாங்க அலைமோதும் மக்கள்
இந் நிலையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி கட்டுப்பாட்டால் அரிசி விலை உயரக்கூடும் என்ற கவலை வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கனடா முதல் அமெரிக்கா வரை, மலேசியா முதல் ஆஸ்திரேலியா வரை அவசர அவசரமாக இந்தியர்கள் கடைகளில் அரிசி வாங்கி சேர்த்து வருகின்றனர்.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகின்றன.

அதேவேளை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல கடைகளில், வாடிக்கையாளர் ஒருவருக்கு இத்தனை கிலோ அரிசிதான் விற்கப்படும் என்ற கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு இந்திய உணவங்களின் நிலை
இந்நிலையில் ‘கடந்த சில நாட்களாக, பலர் தாங்கள் வழக்கமாக வாங்குவதை விட இரு மடங்கு அதிகமாக அரிசி வாங்குகின்றனர். அதனால்தான் அரிசி விற்பனைக்கு கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு 5 கிலோ அரிசி பை மட்டுமே விற்கிறோம். சிலர், ஒரு அரிசி பைக்கு மேல் கேட்டு சண்டை போடுகிறார்கள். அதற்காக நாங்கள் அசைந்துகொடுப்பதில்லை’ என்று ஆஸ்திரேலியா சர்ரே ஹில்ஸ் இந்திய மளிகை அங்காடி ஒன்றின் மேலாளர் கூறுகிறார்.

அது மட்டுமல்லாது உலகெங்கும் ஆயிரக்கணக்கான இந்திய உணவகங்கள் இயங்கிவருகின்றன. இந்நிலையில் இந்தியர்களின் ‘அரிசி வேட்டை இந்திய உணவக உரிமையாளர்களை கவலை அடையச் செய்துள்ளது.

மேலும் மோசமான காலநிலை, ரஷியா-உக்ரைன் போர் காரணமாக ஏற்கனவே உலக உணவுச் சந்தைகள் தடுமாற்றத்தில் உள்ள நிலையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி கட்டுப்பாடு, சர்வதேச அளவில் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.