கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடுங்குளிரில், உறைபனியில், நடந்தே நுழைய முயன்று, ஒரு குடும்பமே பனியில் உறைந்து இறந்துகிடந்த சம்பவம் மூன்று நாடுகளை அதிரவைத்த விடயம் நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அந்தக் குடும்பம் உட்பட புலம்பெயர்வோர் பலரை அமெரிக்காவுக்குள் கடத்த உதவிய இருவர் வழக்கில் இரண்டுபேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் அடங்கிய குடும்பம், அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றது.
ஆனால், கனடா அமெரிக்க எல்லையில், பனியில் உறைந்து, அந்தக் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரும் பரிதாபமாக பலியாகிக் கிடந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கின.
பட்டேல் குடும்பத்தினர் உட்பட பலரை கனடா அமெரிக்க எல்லை வழியாக கடத்திய விவகாரம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட ஹர்ஷ்குமார் பட்டேல் மற்றும் ஸ்டீவ் ஷாண்ட் (Steve Shand) என்னும் இருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
Fergus Falls என்னுமிடத்தில் அமைந்துள்ள பெடரல் நீதிமன்றத்தில் அந்த வழக்கு திங்கட்கிழமை துவங்கியது.
இந்நிலையில், ஆட்கடத்தல், புலம்பெயர்ந்தோரை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர சதித்திட்டம் தீட்டியது முதலான நான்கு விடயங்களில் ஹர்ஷ்குமார் பட்டேல் மற்றும் ஸ்டீவ் ஷாண்ட் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
அவர்கள் இருவருக்கும், முதல் இரண்டு குற்றங்களுக்காக குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் வரையும், மூன்றாவது குற்றத்துக்காக 10 ஆண்டுகளும் நான்காவது குற்றத்துக்காக 5 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.