Reading Time: < 1 minute

கனடாவில் லிபரல் அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள இணைய செய்தி தொடர்பான புதிய சட்ட காரணமாக அதிக எண்ணிக்கையிலான கனடியர்கள் கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

பில் சி 18 அல்லது இணைய செய்தி சட்டம் காரணமாக கனடிய மக்கள் எதிர்வரும் காலங்களில் மெட்டா, கூகுள் போன்ற உலகின் முதல் நிலை தொழில்நுட்ப நிறுவனங்களின் சில வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக முகநூல் மற்றும் கூகுள் போன்றவற்றின் செய்திகளை பார்வையிட முடியாத ஒரு சூழ்நிலை உருவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் கனடிய மக்கள் மிகுந்த கரிசனையை வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சட்டத்தில் இணையத்தில் குறித்த தொழிற்ப நிறுவனங்களின் செயலிகள் அல்லது இணைய தளங்கள் ஊடாக பிரசுரிக்கப்படும் செய்திகளுக்கு கனடிய ஊடக நிறுவனங்களை கட்டணம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டம் தொழில்நுட்ப நிறுவனங்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

இதனால் கூகுள் மெட்டா போன்ற நிறுவனங்கள் கனடாவில் செய்தி சேவையை வழங்குவதில்லை என தீர்மானித்துள்ளன.

அரசாங்கத்திற்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையிலான இந்த முரண்பாட்டு நிலையினால் இணைய பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அவர்கள் கரிசனை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.