அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தற்போது பெரும் விவாதத்தில் சிக்கியுள்ள கனேடிய நிறுவனத்திற்கு தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த தாயார் ஒருவர் தமது மகன் இணையமூடாக வாங்கிய பொதியை பயன்படுத்தியதால் மரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
டோனியா ஜோன்ஸ் என்ற அந்த தாயார் தெரிவிக்கையில் தமது மகன் 17 வயதான அந்தோணி ஜோன்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள அந்த கனேடிய நிறுவனத்தில் இருந்து சோடியம் நைட்ரைட் பொதியை வாங்காமல் இருந்திருந்தால் தற்போது உயிருடன் இருந்திருப்பான் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, இணையமூடாக வாங்கிய பொருளை தாம் உட்கொண்டதாக கூறி, அந்த நள்லிரவு நேரம் தமது மகன் உதவி கேட்டு தமது அறைக்கு வந்ததாக டோனியா ஜோன்ஸ் நினைவு கூர்ந்துள்ளார்.
உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கதறிய அந்த சிறுவன், நான் சாக விரும்பவில்லை, உயிருடன் இருக்க வேண்டும் என கெஞ்சியதாகவும் அந்த தாயார் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவசர மருத்துவ உதவி பிரிவினரால் சிறுவனை காப்பாற்ற முடியாமல் போனது. சிறுவன் சோடியம் நைட்ரைட் ரசாயனத்தை உட்கொண்டதாக பரிசோதனையில் தெரியவர, அதற்கான மாற்று சிகிச்சை என்ன என்பது தெரியாமல் மருத்துவர்கள் தடுமாறியதாக கூறப்படுகிறது.
மேலும், அந்தோணி ஜோன்ஸ் அறையில் இருந்து கைப்பற்றிய பொதியில், கனடா பொலிசாரால் கைது செய்யப்பட்ட கென்னத் லா என்பவரின் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
57 வயதான கென்னத் லா கடந்த வாரம் மிசிசாகாவில் கைது செய்யப்பட்டார். ஒன்ராறியோ பகுதியில் இருவரை தற்கொலைக்கு உதவியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி பீல் பிராந்திய பொலிசார் தெரிவிக்கையில் கென்னத் லா தமது நிறுவனம் ஊடாக 40 நாடுகளுக்கு 1.200 சோடியம் நைட்ரைட் பொதுகளை அனுப்பி வைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், கனடாவுக்கு வெளியே ஏற்பட்டுள்ள மரணங்களுக்கு இதுவரை கென்னத் லா மீது வழக்குகள் எதுவும் பதியப்படவில்லை.