தன் கட்சிக்காரரான பதின்மவயதுப்பெண், ஆறு முறை அதிகாரிகளால் ஆடை களையப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டதால், அவரது தண்டனையைக் குறைக்கவேண்டும் என கனேடிய பெண்ணொருவரின் சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், பூங்கா ஒன்றில் படுத்திருந்த, வீடற்றவரான கென்னத் லீ (59) என்னும் நபரை சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கினார்கள் ஒரு கூட்டம் பதின்மவயதுப் பெண்கள்.
படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லீ, டிசம்பர் மாதம் 18ஆம் திகதி உயிரிழந்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து, லீயைத் தாக்கிய, 13 முதல் 16 வயதுடைய எட்டு பெண்கள் கைது செய்யப்பட்டார்கள்.
இந்நிலையில், அந்த பெண்களில் ஒரு 13 வயதுப்பெண்ணை, அதிகாரிகள் ஆறு முறை கட்டாயப்படுத்தி ஆடை களைந்து நிர்வாணமாக்கி சோதனைக்குட்படுத்தியுள்ளார்கள்.
சிறார்கள் மற்றும் இளைஞர்கள் சேவை அமைச்சகக் கொள்கை, காவலில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் ஆடை களையப்பட்டு சோதனை செய்யப்படுவதை அனுமதித்தாலும், அவர்களை ஒருபோதும் முழுமையாக நிர்வாணப்படுத்தக்கூடாது என்று கூறுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சட்சியமளித்த சம்பந்தப்பட்ட இளம்பெண், தான் நிர்வாணமாக்கப்பட்டதால் இப்போதும் அவமானமாக உணர்வதாக தெரிவித்தார்.
அவர்கள் என்னை நடத்திய விதம், என்னைக்குறித்து நானே மோசமாக உணரும் நிலையை ஏற்படுத்திவிட்டது என்றும், மக்கள் தன்னைப் பார்க்கும்போது அசௌகரியமாக உணர்வதாகவும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, தனது கட்சிக்காரரான அந்தப் பெண் விதிகளை மீறி அவமதிக்கப்பட்டதாலும், அது அவரது மன நிலையை பாதித்துள்ளதாலும், அவரது தண்டனைக்காலத்தை குறைக்கவேண்டும் என அந்தப் பெண்ணின் சட்டத்தரணியான Jordana Goldlist என்பவர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.