கனடாவைச் சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான Bombardier, அமெரிக்க சந்தையில் தனது விமானங்களை தொடர்ந்து விற்பனை செய்ய விரும்பினால், அவற்றை அமெரிக்காவிலேயே தயாரிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திங்கட்கிழமை தனது சமூக வலைத்தளப் பதிவில் Bombardier நிறுவனத்தை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், அமெரிக்க சந்தையை பயன்படுத்த விரும்பினால் அந்நிறுவனம் அமெரிக்காவில் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்க சந்தை வேண்டுமெனில் அவர்கள் இங்கேயே தயாரிக்க வேண்டும். அமெரிக்காவை ஒரு ‘piggybank’ போல நடத்துவதை நிறுத்த வேண்டும்,”
என ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். Bombardier நிறுவனத்தின் வருமானத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி அமெரிக்காவுடன் தொடர்புடையது என்றும் அவர் கூறியுள்ளார்.
கனடா – அமெரிக்கா வர்த்தக மோதல் தீவிரம்
அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தக மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்கா கனடிய பொருட்கள் மீது புதிய வரிகளை விதித்ததற்கு பதிலடியாக, செப்டம்பர் 8, செவ்வாய்க்கிழமை முதல் C$27.6 பில்லியன் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது கனடாவின் எதிர்வரி நடவடிக்கைகள் அமலுக்கு வந்துள்ளன.
கனடா அமெரிக்க வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு தனது சந்தையில் போதுமான வாய்ப்புகளை வழங்கவில்லை என்றும், குறிப்பாக அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான Gulfstream Aerospace தொடர்பில் அநீதி நடந்ததாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும், Gulfstream நிறுவனத்தின் சில விமானங்களுக்கு கனடா அனுமதி வழங்கவில்லை என்ற விவகாரத்தை முன்வைத்து கடந்த ஜனவரியிலும் ட்ரம்ப் Bombardier மீது 50 சதவீத இறக்குமதி வரி மற்றும் சான்றிதழ் நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எச்சரித்திருந்தார். அந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரவில்லை. பின்னர் கனடா Gulfstream நிறுவனத்தின் பல விமானங்களுக்கு சான்றிதழ் வழங்கியது.
Bombardier பதில்
ட்ரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து Bombardier நிறுவனம், அமெரிக்க பொருளாதாரத்தில் தமது நிறுவனம் ஏற்கனவே முக்கிய பங்களிப்பைச் செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
Bombardier நிறுவனத்திற்கு அமெரிக்காவில் சுமார் 3,500 ஊழியர்கள் உள்ளதுடன், 47 மாநிலங்களில் சுமார் 2,800 அமெரிக்க விநியோக நிறுவனங்களுடன் அது இணைந்து செயல்படுகிறது. ஆண்டுதோறும் அமெரிக்க விநியோக நிறுவனங்களிடம் இருந்து US$2.5 பில்லியனுக்கும் அதிகமான பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Bombardier விமானங்களில் பயன்படுத்தப்படும் என்ஜின்கள், விமான மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல முக்கிய பாகங்களும் அமெரிக்க நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன.
அமெரிக்க நிறுவனங்கள், ஊழியர்கள் மற்றும் சமூகங்களுடனான தனது முதலீடுகளையும் கூட்டாண்மையையும் தொடர திட்டமிட்டுள்ளதாக Bombardier தெரிவித்துள்ளது.
NetJets உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தாக்கம்?
Bombardier நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் ஜெட் நிறுவனமான NetJets ஒன்றாக உள்ளது.
Bombardier வாடிக்கையாளர்களால் இயக்கப்படும் சுமார் 5,100 விமானங்களில் ஏறத்தாழ பாதி அமெரிக்காவில் இருப்பதாக Reuters தெரிவித்துள்ளது. இதனால் Bombardier விமானங்களின் விற்பனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கை உண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டால், அமெரிக்க தனியார் விமானத் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனினும், Bombardier விமானங்களின் அமெரிக்க விற்பனையை ட்ரம்ப் எவ்வாறு சட்டரீதியாகத் தடுக்கப் போகிறார் என்பது குறித்து வெள்ளை மாளிகை இதுவரை தெளிவான நடைமுறையை அறிவிக்கவில்லை. Bombardier விமானங்கள் அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகமான FAA-வின் அனுமதியையும் பெற்றுள்ளன.





Comments are closed, but trackbacks and pingbacks are open.