அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகளுக்கு அஞ்சி மானிடோபா மாகாணம் தனது நிலைப்பாட்டை மாற்றாது என்றும், அமெரிக்க மதுபானங்கள் மீதான தடை தொடரும் என்றும் மாகாண முதல்வர் வாப் கினியூ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில கனடியப் பொருட்களுக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கும் பிரகடனத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்தப் புதிய வரிகள் 2026 ஆகஸ்ட் 19ஆம் திகதி முதல் அமலுக்கு வரவுள்ளன.
கனடாவின் வாகன இறக்குமதிக் கொள்கைகள், பால் உற்பத்தித் துறையைப் பாதுகாக்கும் விநியோக மேலாண்மை முறை மற்றும் பல மாகாணங்களில் அமெரிக்க மதுபான விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அமெரிக்காவின் புதிய வரி மிரட்டல்களுக்குப் பணியப்போவதில்லை என வாப் கினியூ தெரிவித்துள்ளார். அமெரிக்க மதுபானங்களை மீண்டும் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டுமாயின், கனடியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் நீக்கப்பட்டு நியாயமான வர்த்தக உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்பதே மானிடோபாவின் நிலைப்பாடாக உள்ளது.
அமெரிக்கப் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது கனடா சிறிய நாடாக இருந்தாலும், அனைத்து மாகாணங்களும் தேசிய ஒற்றுமையுடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனவும் கினியூ வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு எதிரான கனடாவின் ஒற்றுமை தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மானிடோபாவில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களை அரச மதுபான விற்பனை நிலையங்களில் விற்பனை செய்வதற்கும், புதிதாகக் கொள்வனவு செய்வதற்கும் முதன்முதலில் 2025ஆம் ஆண்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அமெரிக்க வரிகள் நீக்கப்படும் வரை புதிய அமெரிக்க மதுபானங்களை இறக்குமதி செய்யப்போவதில்லை என மாகாண அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
இதற்கிடையில், அமெரிக்காவின் புதிய வரிகள் கனடா–அமெரிக்கா–மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தத்தின் விதிகளுக்கு முரணானவை என கனடா குற்றம்சாட்டியுள்ளது. இந்த வர்த்தகப் பிரச்சினைக்குத் தீர்வு காண அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தவுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்தால், உற்பத்தி மற்றும் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்து, அதன் சுமை பொருட்களின் விலை உயர்வு மூலம் கனடா மற்றும் அமெரிக்க பொதுமக்கள் மீது சுமத்தப்படலாம் என பொருளாதார மற்றும் வர்த்தக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.