Reading Time: < 1 minute

அமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான தடுப்பூசி ஏற்றுமதியில் அதன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிக்கோவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடா உள்ளிட்ட நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பூசி ஏற்றுமதியில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு மே மாதத்துக்குள் தடுப்பூசி போட அமெரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் பின்னர் சா்வதேச நாடுகளுடன் அமெரிக்க தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்ளும் என ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இவ்வாறான நிலையிலேயே ஏற்றுமதியில் கனடா மெக்ஸிக்கோவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கர்களுக்குத் போதியளவு தடுப்பூசிகள் உறுதி செய்யப்படும் வரை ஏனைய நாடுகளுடன் தடுப்பூசிகளைக் பகிர்ந்துகொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி ஜோ பைடன் முன்னர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மே மாதத்தின் பின்னர் சர்வதேச நாடுகளுடன் தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்வது குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தடுப்பூசி ஏற்றுமதியை அமெரிக்க நிராகரித்த நிலையில் கனடா தனக்கான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் தடுப்பூசிப் பகிர்வுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் கனடா அதிகளவு தடுப்பூசிகளைப் பெறுவதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அடுத்த வாரம் கனடாவுக்கு 20 இலட்சம் தடுப்பூசிகள் வந்து சேரும் என எதிர்பார்ப்பதாக கனேடிய கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். 12 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் மற்றும் 8 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் அடுத்த வாரம் வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தடுப்பூசிகளை பகிர்ந்துகொள்ளுமாறு அமெரிக்காவிடம் கனடா கோரிக்கை விடுத்துள்ளதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. எனினும் அதற்கு அமெரிக்க ஒப்புக்கொண்டுள்ளதா? என்பது குறித்து கருத்து வெளியிட வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.

கனடாவின் கோரிக்கை குறித்து பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் சாகி தெரிவித்துள்ளார். ஆனால் கனடாவின் கோரிக்கைக்கு இணக்கமான பதில் வழங்கப்பட்டா? இல்லையா? என்பது குறித்து அவரும் கருத்து வெளியிடவில்லை.

அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி போடுவதே பைடனின் முன்னுரிமைத் திட்டமாகும் எனவும் என அவா் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

எனினும் தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வெள்ளை மாளிகை உணர்ந்துள்ளதாகவும் சாகி தெரிவித்துள்ளார்.